இயலிசை அறிஞர், சிதம்பரம்
சி.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை
தமிழிசைப்
புரட்சிக்குப் பின் தோன்றிய தமிழிசைப் புலவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்
சி.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை ஆவார். இவரது பாடல்கள் இனிமையும், கருத்துச் செறிவும்
உடையதாக விளங்குகிறது. இவரைப் பற்றியும், இவர் பாடல்களின் சிறப்பைப் பற்றியும் அறிந்து
போற்றுவது நம் கடமையாகும்.
சிதம்பரத்தில்
வாழ்ந்த தலைச்சிறந்த பரத நாட்டிய வித்வான், தமிழ்ப்புலவர் சாமிநாதப் பிள்ளை - சுந்தரவல்லி
என்போரின் இரண்டாவது குமாரராக கார்த்திகை
மாதம் 18 ஆம் தேதி பராபவ வருடத்தில் நடராஜசுந்தரம் பிறந்தார். இவரது சகோதரர் மூத்த
குமாரர் சி.எஸ்.செல்வரெத்தினம் பிள்ளையாவார்.
இவர்
வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், கதாகாலட்சேபம், நடிகராகவும் புகழ் பெற்றவர். நடராஜசுந்தரம்
அவர்கள் தனது சிறிய தகப்பனார், கும்பகோணம் மிருதங்க வித்வான் சா.பக்கிரிசாமிப் பிள்ளை
வீட்டில் வளர்ந்து அவரிடம் மிருதங்கம் பயின்றார். தனது 28 வது வயதில் சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ
மகான் லாலா சுவாமிகளை ஆசானாக ஏற்று அருள்பெற்றுப் பல இசைப்பாடல்களைப் பாடினார்.
இசையுலகில்
புகழ்ப்பெற்ற 'கைவிட மாட்டான் கனகசபேசன்' எனும் தமிழ்ப் பாடலை இயற்றியவர் இவரே !. இவரின்
மற்றப் பாடல்கள், 'கீத வர்ணங்கள்' எனும் தலைப்பில் தமிழிசைப் பாடல்கள் - எண் 21 ஆம் தொகுதியாக
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், கீதங்கள் -
28, வர்ணங்கள் - 20, கீர்த்தனங்கள் - 33, பதங்கள் - 5 ஆகியவை அடங்கியுள்ளன. இவையல்லாமல், வேறுபல
தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்நூலில்
உள்ள தமிழிசைப் பாடல்கள், பக்திப் பாடல்களாவும்,
வாழ்வின் உண்மைநிலையை எடுத்துரைக்கும் தத்துவப்பாடல்களாகவும், சொல்வளமும் பொருள்வளமும் பொருந்தியதாக அமைந்துள்ளது.
' சாதி சமயங்களேது சமய சாத்திர வேத புராணங்கள்
கூறும்' (கானடா ராகம்) போன்ற சமத்துவ கருத்துகள் நிறைந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இப்பாடல்களில் பெரும்பாலானவை
மேடைகளில் இன்னும் பாடப்படவில்லை என்பது தமிழிசைக்கு பேரிழப்பாகும்.
இவர்
'இளங்கொடியாள்' எனும் நாடகத்தினையும் எழுதி
நூலாக வெளியிட்டுள்ளார். இந்நாடகம், சிலப்பதிகாரம் எழுந்த கதையாக அமைந்துள்ளது. இக்கதை,
நாமறிந்த சிலப்பதிகாரத்தின் கதைக்கு மாறுபட்டதாக உள்ளது. ஆனால், இக்கதை கர்ண பரம்பரையாக
வழங்கப்பட்டதெனவும், முடி மறைக்கப்பட்டது என்றும் ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார்.
சியாமளா
(1952- யுவ பிக்சர்ஸ் ) எனும் படத்தில், டி.இராமநாதன் இசையில் கம்பதாசன் அவர்களுடன்
இணைந்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இவரின்
சிறிய தகப்பனார், சிதம்பரம் நாகசுர வித்வான்
‘பல்லவி’
வைத்தியநாத பிள்ளையாவார். திருமணம் செய்துகொள்ளாத
நடராஜசுந்தரம் பிள்ளை, தனது அறுபத்தெட்டாம் வயதில் 01.02.1974 அன்று காலமானார்.
ஆலங்குடி, முனைவர் ப. கோபாலகிருஷ்ணன்

Comments
Post a Comment